தேனி

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேசிய -தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

தேசிய -தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.ஐயக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவிடம்  மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், "மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 

நீர் நிலைகளைத் தூர்வாரி, புதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும். 

நதிகளைத் தேசிய மயமாக்க வேண்டும். 

விவசாய விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். 

உணவுப் பொருள்களை இறக்குமதி செய்யக் கூடாது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். 

முல்லைப் பெரியாற்றில் பல்வேறு இடங்களிலும் கழிவு நீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வருஷநாடு மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர், சிற்றோடைகள் மூலம்  மூல வைகை ஆற்றுக்கு வந்தடைவதை உறுதி செய்ய வேண்டும். 

மங்கலதேவி கண்ணகி கோயில் முதல் மறையூர் வரை தமிழக - கேரள எல்லைகளை வரையறை செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.