Farmers arrested for selling cheese Tamil Nadu Government to ...

தருமபுரி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆலைக்கு வழங்கிய கரும்பு போக மீதமுள்ள கரும்பில் வெல்லம் தயாரித்தால், கள்ளச்சாராயம் தயாரிக்க வெல்லம் விற்பனை செய்வதாக கூறி காவலாளர்கள் கைது செய்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி தலைமை வகித்தார். பின்னர், இதில் நிறைவேற்றப்பட இருந்த தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

மாநிலப் பொதுச்செயலாளர் சுந்தரம், மாநிலப் பொருளாளர் வேலுமணி, மாநிலத் துணைத் தலைவர்கள் பாண்டியன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்டத் தலைவர் செங்கோடன் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தில், “உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவிற்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மணிமண்டபம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

திருப்பத்தூர் பகுதியில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆலைக்கு வழங்கிய கரும்பு போக மீதமுள்ள கரும்பில் வெல்லம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களை கள்ளச்சாராயம் தயாரிக்க வெல்லம் விற்பனை செய்வதாக கூறி காவலாளர்கள் கைது செய்கிறார்கள். இந்த நடவடிக்கையை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கவும், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்துவிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூறைக்காற்றினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வறட்சியைப் போக்கும் வகையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே எண்ணேகொல்புதூர் தடுப்பணையில் இருந்து தும்பலஅள்ளி அணை மற்றும் கிழக்குபுற கால்வாய் மூலம் படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையிலும், மாநில அளவிலான உழவர்தின மாநாட்டை வருகிற ஜூலை மாதம் 5-ஆம் தேதி தர்மபுரியில் சிறப்பாக நடத்துவது” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், ஸ்ரீராம்ரெட்டி, சென்னையநாயுடு, கணேசன், தனபால், மனோகரன், பெரியசாமி, பழனிமுருகன், கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் இறுதியில் தர்மபுரி மாவட்ட பொருளாளர் பழனி நன்றித் தெரிவித்தார்.