பெரம்பலூர்

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் சின்னதுரை பாலக்கரையில் ஊர்வலத்தை தொடங்கிவைக்க, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் முடிந்து அங்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திமுகச் செயலாளர் ராஜேந்திரன் தலைமைத் தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் சிறப்புரை ஆற்றினார். விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் தங்கராசு வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “கடந்த ஆண்டு வறட்சியால் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பயிர் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்கிட வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.

ஏரிகள் வரத்து வாய்க்கால்களை முறைகேடு இல்லாமல் தூர் வார வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு, உதய் திட்டம் மூலம் இலவச மின்சாரத்தை நிறுத்த கூடாது.

விவசாய மின் இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டும்.

சிலிண்டர் மானியம், ரேசன் மானியங்களை ரத்து செய்ய கூடாது.

பெரம்பலூர் சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தி, இணை மின் உற்பத்தி திட்டத்தை உடனே தொடங்க வேண்டும்.

சின்ன முட்டுலு நீர்த்தேக்க திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இதில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி, திராவிடர் கழக தொண்டர்கள், கரும்பு விவசாயிகள் சங்கம், ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமன் நன்றித் தெரிவித்தார்.