மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், அவமானம் அடைந்த குடும்பத்தினர் 4 பேர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பெத்தநாய்க்கன் பாளையம் தாண்டானூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50) விவசாயி. இவரது மனைவி ராணி (45). இவர்களுக்கு மோகனா (21), ஆர்த்தி (19) ஆகிய மகள்களும், நவீன்குமர் (15) என்ற மகனும் உள்ளனர்.

மோகனா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தமிழக அரசின் வேலையில் சேர டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்தார். ஆர்த்தி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 3ம் ஆண்டு படித்து வந்தார். நவீன்குமார் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார். 

பயிற்சி வகுப்பு சென்ற மோகனாவுக்கும், பெரிய கவுண்டாபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.

மகளின் காதல் விவகாரம், ராஜேந்திரனுக்கு தெரிந்தது. இதனால், அவரை கண்டித்த பெற்றோர், மோகனாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காதலனை சந்திக்க தடைவிதித்தனர். ஆனாலும் மோகனாவால் மணியை மறக்க முடியவில்லை. அடிக்கடி காதலனை சந்தித்து வந்தார்.

இதனால் மோகனாவை மீண்டும் பெற்றோர் திட்டினார்கள். இவர்கள் காதல் விவகாரம் ஊர் மக்களுக்கும் தெரிந்தது. இதுபற்றி ஊர் மக்கள், அவரிடம் விசாரித்ததால், ராஜேந்திரன், மகளால் தனது குடும்பத்துக்கு அவமானம் வந்து விட்டது என்று கருதினர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி, மோகனா, காதலனை சந்தித்து பேசுவது தொடர்கதையாக இருந்தது.

ஒரு கட்டத்தில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 3 நாட்களுக்கு திருமணம் செய்து கொண்டது. பின்னர் இருவரும் நேற்று பாதுகாப்பு கேட்டு காரிப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைத்தனர்.

இதற்கிடையில் ராஜேந்திரன், மகளை காணாமல் பல இடங்களில் தேடினார். ஆனால், எந்த தகவலும் இல்லை. இதையடுத்து, ஏத்தாப்பூர் போலீசில் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது மோகனா காதல் திருமணம் செய்தது தெரிந்தது. மேலும் காதல் ஜோடி காரிப்பட்டி போலீசில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது.

இதையறிந்ததும் வேதனை அடைந்த ராஜேந்திரன் குடும்பத்தினர், அவமானம் தாங்க முடியாமல், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கிடையில் போலீசார், மறுநாள் காலை காவல் நிலையம் வரும்படி கூறியிருந்தனர்.

மகளால், காவல் நிலையத்தின் படிக்கட்டை மிதிக்க வேண்டுமா என வேதனை அடைந்த ராஜேந்திரன், குடும்பத்தினருடன் சேர்ந்து, விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று காலை நீண்டநேரம் ஆகியும் ராஜேந்திரன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த, அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ராஜேந்திரன் உள்பட குடும்பத்தினர் 4 பேரும் வாயில் நுரை தள்ளியபடி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துகு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.