நாமக்கல்,
புதுச்சத்திரம் அருகே உள்ள நவணி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
“எங்கள் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் விஷவாயு கொண்ட புகையால் சுற்றுப்புற சூழல் மற்றும் காற்று மாசடைந்து வருகிறது.
மேலும் விஷவாயு கொண்ட புகையை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அதிக அளவிலான ஒலி எழுப்புவதால், ஊரில் உள்ள பொதுமக்கள் தூக்கமின்றி அவதி அடைந்து வருகிறோம். இதனால் பள்ளி மாணவ, மாணவிகளும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொழிற்சாலையை ஆய்வு செய்து, மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்துக்கு மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும்” என்று அந்த மனுவில், பொதுமக்கள் கூறியிருந்தனர்.
