அரியலூர்

அரியலூரில் நேருக்கு நேர் வந்த மோட்டார் சைக்கிள்கள் வேகமாக மோதிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் இருவர் பலியானார்கள். பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

அரியலூர் மாவட்டம், வாழைக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (61). கொத்தனாரான இவரது மனைவி பானுமதி (52). 

இவர்கள் இருவரும் நேற்று காலை திருமானூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஏலாக்குறிச்சி சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். 

திருச்சி மாவட்டம் கல்லக்குடியைச் சேர்ந்த ஞானபிரகாசம் (45) என்பவர் ஏலாக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிகிறார். இவர் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி சாலையில் ஆண்டவர் கோவில் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் வேகமாக மோதிக் கொண்டன. 

இந்த விபத்தில் மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதில் தனபால், ஞானபிரகாசம் ஆகிய இருவரும் உயிருக்கு போராடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.

இதுகுறித்து தகவலறிந்த திருமானூர் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த பானுமதியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், தனபால், ஞானபிரகாசம் ஆகியோரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்த திருமானூர் காவலாளர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.