Eye irritation to 500 people

தேனியில் பக்தர்கள் பூசிய விபூதியால் கண் எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்பட்ட செய்தியில் உண்மை இல்லை என்றும், திருவிழாவில் பொருத்தப்பட்டிருந்த சக்திவாய்ந்த மின் விளக்கால் கண்ணின் கருவிழி பாதிக்கப்பட்டு எரிச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது செய்தி வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியியில் ஸ்ரீமது சௌடாம்பிகை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பலர் நேர்த்திக்கடன் செலுத்தியும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கத்தி போடும் நேர்த்திக்கடனும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கத்திப்போடும் பக்தர்களுக்கு காயம்படாமல் இருக்க விபூதி போடப்படுவது வழக்கம்.

அப்போது திருநீறு வீசப்பட்டுள்ளது. வீசப்பட்ட திருநீறு அங்கிருந்தவர்களின் கண்களில் பட்டு எரிச்சலையூட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கண் எரிச்சல் காரணமாக பக்தர்கள் கடும் அவதிக்குள்ளானியனர். திருநீற்றில் ரசாயனம் கலந்துள்ளதாகவும், அதனால்தான் எரிச்சல் ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அவர்கள், மருத்துவமனை சென்று சிகிச்சை மேற்கொண்டனர். கண் எரிச்சல் பாதிப்படைந்தவர்களை பரிசோதித்த டாக்டர், இது திருநீற்றால் ஏற்படவில்லை என்றும், திருவிழாவில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த மின் விளக்கால் கண் கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினனர்.