தாம்பரம் சானடோரியம் அண்ணா பேருந்து நிலையத்தில் முன்பதிவு மையம் துவங்கியுள்ளது. ஏற்கனவே தாம்பரத்தில் முன்பதிவு மையம் உள்ள நிலையில் கூடுதலாக முன்பதிவு மையம் திறக்கப்பட்டதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நேற்று முதல் சென்னை கோயம்பேட்டில் துவங்கியுள்ளது. இதற்காக கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டு டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

வரும் 26, 27, 28 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்காக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அண்ணா பேருந்து நிலையமும் தற்காலிக பேருந்து நிலையமாக போக்குவரத்து கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிருந்து திண்டிவனம், கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது போலவே, தாம்பரம் சானடோரியத்திலும் சிறப்பு டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டு பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது.

தாம்பரத்தில் முன்பதிவு செய்யும் மையம் ஏற்கனவே இருப்பினும், தாம்பரம் சானடோரியத்திலும் முன்பதிவு மையம் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.