பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (பி.எம்.ஏ.ஒய்) திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 2022ஆம் ஆண்டுக்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்த வீடு கட்டித் தரவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்திற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில ஊரக வளர்சித்துறை மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும், குறிப்பிட்ட அளவு நிதி பங்களிப்போடு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2021-22 ஆம் ஆண்டிற்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2,89,887 வீடுகள் கட்டப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு சிக்கல்கள் காரணமாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு விடுகின்றன. தற்போது இதனை விரைந்து செயல் படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

அதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 4 லட்சத்து 89 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்க இருப்பதாகவும், இதில் 60 முதல் 65% வீடுகள் கட்டும் பணி தொடங்கப்படாமலேயே இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. எனவே வீடுகள் கட்டும் பணி தாமதமாவதை தவிர்க்க 200 வீடுகளுக்கு, தலா ஒரு தொழில்நுட்ப உதவியாளர் தற்காலிகமாக பணியமர்த்தி பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 2016 ஆம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் நிதி ஒதுக்கப்பட்டு, வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ள இடங்களை கண்டறிந்து பணியை விரைந்து தொடங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. நியமிக்கப்படும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளில் இந்த துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
