இராமநாதபுரம் 

சுற்றுலாப் பயணிகல் கடலுக்குள் மூழ்கி அரியவகை கடல் தாவரங்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பார்வையிடலாம் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் இராமநாதபுரத்தில் உள்ள காரங்காடு சுற்றுலா மையத்தில் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் இருக்கிறது மாங்குரோவ் காடுகள். இயற்கை எழில் நிறைந்து காணப்படும் இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த இடம். 

மேலும், இந்தப் பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் தாழைகள், கடற்புற்கள், கடற்தாமரை, நட்சத்திர மீன் வகைகள், அபூர்வ வகை நண்டு போன்றவை அதிகளவில் காணப்படுகின்றன.

இங்குள்ள மாங்குரோவ் காடுகள் பறவையினங்கள் இனப்பெருக்கம் செய்ய உகந்ததாக இருப்பதால் கொக்கு, நீர் காகம், நாரை, அரிவாள் மூக்கன்நாரை, உள்ளான், நத்தை கொத்தி நாரை, சிட்டு, வண்ண வண்ண குருவிகள் போன்ற பலவகையான பறவைகளும் அதன் சரணாலயமாக கருதி வருகின்றன.

இதேபோல இங்குள்ள கடல் பகுதியில் கடல் பசுக்கள் உயிர் வாழவும் இனவிருத்தி செய்யவும் பாதுகாப்பான சூழல் இருப்பதாலும் அவையும் அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் இங்குள்ள தீவு பகுதியை வனத்துறை கடல் பசு தீவாக அறிவித்துள்ளது. காரங்காடு சூழல் சுற்றுலா மையமாகவும்அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையொட்டி இங்கு தினமும் வரும் சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க படகு சவாரியும், பறவைகளை பார்த்து ரசிக்க உயர் கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் இருக்கும் அரியவகை தாவரங்கள் மற்றும் மீன் வகைகளை சுற்றுலா பயணிகள் கடலுக்குள் மூழ்கி பார்த்து இரசிக்க பாதுகாப்புடன் கூடிய கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வனத்துறை மூலம் இங்குள்ள சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மன்னார் வளைகுடா கடல் வாழ் தேசிய பூங்கா வன உயிரின காப்பாளர் அசோக்குமார், வனச்சரகர் சதீஸ் கடல்வாழ் அரியவகை உயிரினங்களை எவ்வாறு சுற்றுலா பயணிகள் பார்வையிட வேண்டும்? இங்குள்ள அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் தாழைகள், கடற்புற்கள் போன்ற வற்றை பாதுகாப்பது குறித்தும் வனத்துறை அலுவலர்கள் மற்றும் சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழுவிற்கு இந்திய வன உயிர் நிறுவன கடல் ஆராய்ச்சியாளர்கள் பிரேம் ஜோதி, ருக்மணி சேகர், மதுமகேஸ், மன்னார் வளைகுடா கடல் வாழ் தேசிய பூங்கா வனவர் சுதாகர் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.

அப்போது இங்குள்ள கடல் பசு தீவு பகுதியில் பாதுகாப்பு கவசங்களுடன் கடலுக்குள் ஆழம் குறைவான பகுதியில் கண்ணாடி அணிந்து கொண்டும் ஆழம் அதிகமுள்ள பகுதியில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் மூழ்கி கடலுக்குள் உள்ள சுமார் 14 வகையான கடற்புற்களை பார்வையிட்டனர். நட்சத்திர மீன் வகைகளையும், அரியவகை மீன்களையும் பார்வையிட்டனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை படகின் மூலம் கடலுக்குள் அழைத்து செல்லும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மயக்கநிலை ஏற்படும் போதும் ஆபத்து காலங்களில் செய்ய வேண்டிய முதலுதவிகள், பாதுகாப்பு கவசங்கள் அணியும் முறைகள், குறித்தும் பயிற்சியளித்தனர்.

அப்போது வனத்துறை அதிகாரிகள் காரங்காடு சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவசங்களுடன் கடலுக்குள் மூழ்கி அரியவகை கடல் தாவரங்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை பார்வையிடலாம் என்றும் இதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினர்.