Asianet News TamilAsianet News Tamil

எல்லோருக்கும் எல்லாம்! திமுகவின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள் இன்று தொடக்கம்

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’, ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ பரப்புரையின் தொடர்ச்சியாக ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற பெயரில் 3 நாள் 161 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

Everything for everyone! DMK's election campaign public meetings begin today sgb
Author
First Published Mar 2, 2024, 2:59 PM IST | Last Updated Mar 2, 2024, 2:59 PM IST

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனை முன்னிட்டு திமுக ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற பெயரில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு பொதுக்கூட்டங்களை நடத்த உள்ளது.

கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதல் திமுகவினர் வீடு வீடாகத் துண்டு பிரசுரங்களை விநியோகித்துத் திண்ணைப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நிர்வாகிகள், பூத் கமிட்டியினர், சார்பு அணிகளைச் சார்ந்தோர் என அனைவரும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் பரப்புரை செய்து வருகின்றனர்.

"திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் தமிழ்நாடு அரசின் 2024–2025–ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சம்களையும் இல்லந்தோறும் கொண்டு சேர்க்கவும், ஒன்றிய அரசின் மூலமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து கொடுத்து வரும் வேதனைகளையும் ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில்" இந்த பரப்புரை மேற்கொண்டு வருவதாகத் திமுக கூறியுள்ளது.

பிப்ரவரி 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் நடைபெற்றது. பிறகு ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்று திண்ணைப் பிரசாரம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகத் திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் இக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

மார்ச் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 'எல்லோருக்கும் எல்லாம்'  பொதுக்கூட்டங்கள் மாநிலம் முழுவதும் 161 இடங்களில் .நடக்க உள்ளன. இந்தப் பொதுக்கூட்டங்களில் திமுகவின் முன்னணி பேச்சாளர்கள் அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்.பி.க்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios