கொரோனா பரவல் அதிகரிப்பு; முகக்கவசம் அணிவது கட்டாயம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அந்தந்த மாநில சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள், நோயாளிகளுடன் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே இருப்பதால் மாநில சுகாதாரத்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையாக பொது இடங்கள், கூட்டரங்குகள், திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதனை உத்தரவாக பிறப்பிக்காமல் அறிவுறுத்தலாக வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அச்சமடையும் அளவில் இல்லை. ஆனால், அனைவரும் முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். திரையரங்குகள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், மூடப்பட்ட அரங்குகள் உள்பட மக்கள் அதிகமாகக் கூடும் அரங்குகளில் இருப்பவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.