ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகிக்கிறார். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில், நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்துள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈ.வி.கே.இளங்கோவன் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதான அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 46 பேர் போட்டியிட்டனர். இந்த இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக, விஜய்யின் தவெக கட்சியும் புறக்கணிப்பதாக அறிவித்தனர். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில், 74 ஆயிரத்து 260 ஆண் வாக்காளர்களும், 80 ஆயிரத்து 376 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முதலே திமுக முன்னிலை வகித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 24,128 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3,792 வாக்குகள் பெற்றுள்ளனர். 17 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட உள்ளது. காலை 10 மணியளவில் முடிவு தெரியவரும். அதிமுக, பாஜக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் இந்த வாக்குகள் யாருக்கு சென்றுக் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நோட்டாவிற்கு அதிகமான ஓட்டு விழுந்துள்ளதாக என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.