திருவள்ளூர்

ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்கு மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகள் நுழைவுத் தேர்வுகள் வைத்து அச்சுறுத்துகின்றனர் என்று பெற்றோர் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போதைய நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். 

இதுபோன்று விண்ணப்பம் செய்த மாணவ, மாணவிகளை 5-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 6-ஆம் வகுப்பிற்கு சேர்க்கை அளிக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற விதிமுறைகளை மீறி தற்போது நுழைவுத்தேர்வு வைத்து, அதில் கிடைத்த மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை வழங்கி வருகின்றனர். 

இதுபோன்ற, தேர்வுகளை எதிர் கொள்வதற்காக தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அவ்வாறு, சிறப்பு வகுப்புகள் படித்த மாணவ, மாணவிகளுக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்படுவதால், இதர மாணவர்களும், பெற்றோர்களும் அலைக்கழிக்கப்படுகின்றனர். 

ஏற்கெனவே 6-ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு வைத்து மாணவ, மாணவிகளை சேர்க்கக் கூடாது என்று  அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. 

அதனடிப்படையில் அனைத்து தனியார் பள்ளிகளும் நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களை சேர்க்கக் கூடாது. இதில் விண்ணப்பம் செய்யும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் மீறி திருவள்ளூர் பகுதிகளில் ஒரு சில தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு வைத்து அச்சுறுத்தி வருவதாக பெற்றோர்கள் கடும் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், "ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், வெளிப்படையான முறையில் குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இதற்கு மாறாக 6-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு வைத்து மாணவர்களை தேர்வு செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்தந்த பகுதி மாவட்டக் கல்வி அதிகாரிகளை அனுப்பி பள்ளிகளை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.