பொறியியல் பட்டப் படிப்புகள் …. இன்று முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடக்கம்….

பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 553 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 68 ஆயிரம் இடங்களுக்கு, இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதற்கான கலந்தாய்வு, கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. தொழிற்கல்வி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் 2 ஆயிரம் இடங்கள் நிரம்பிஉள்ளன.

 மீதமுள்ள ஒரு லட்சத்து 66 ஆயிரம் இடங்களை நிரப்ப, பொதுக் கலந்தாய்வு இன்று துவங்குகிறது.

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறும் இந்த கலந்தாய்வுக்கு ‘கட் – ஆஃப்’ மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

முதல் நாளான இன்று 2 ஆயிரத்து 900 மாணவர்கள் கலந்தாய்வுக்கு வர இருப்பதாகவும், மாணவர்களுக்குத் தேவையான தகவல் அளிக்கும் மையமும், மண்டல வாரியாக கல்லூரிகளின் விவரங்களும் டிஜிட்டல் பலகைகளில் வைக்கப்படும் என உயர்கல்வித்துறை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு தெரிவித்துள்ளார்.

இன்று தொடங்கும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.