Engine test drive a new broad gauge rail track success Most people are happy

கிணத்துக்கடவு

பொள்ளாச்சி – கிணத்துக்கடவு இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல இரயில் பாதையில் இரயில் எஞ்சின் ஓட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்றது. உயர்த்தப்பட்ட பாதையில் வந்த எஞ்சின் சத்தத்தைக் கேட்டு மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

போத்தனூர் – பொள்ளாச்சி மீட்டர் கேஜ் இரயில் பாதை கடந்த 2009–ஆம் ஆண்டு இறுதியில் அகற்றப்பட்டு அகல இரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பித்தது.

இந்தப் பணிக்கு ரூ. 340 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கிணத்துக்கடவில் ரூ.2 கோடியே 25 இலட்சம் செலவில் புதிய இரயில் நிலையம், மூன்று இரயில்கள் நிற்கும் வகையில் தண்டவாளங்கள், இரண்டு நடைமேடை, படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடந்தது.

கிணத்துக்கடவு – பொள்ளாச்சி செல்லும் வழியில் இரயில்வே தண்டவாளம் சுமார் 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணி தாமதம் ஆனது. ஆனால், தற்போது நிலத்தை கையகப்படுத்தி பணி முடிவடைந்ததால் அகல இரயில் பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்தது.

போத்தனூர் – பொள்ளாச்சி இடையான அகல இரயில் பாதைக்காக தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவுப் பெற்றது. அவை உறுதியாக உள்ளதா? என்பதை அறிய இரயில்வே அதிகாரிகள் மூன்று கட்டமாக ஆய்வு நடத்தினர்.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரை இரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நேற்று பொள்ளாச்சியில் தொடங்கியது. இதில், உதவி தலைமை பொறியாளர் (கட்டுமானம்) ராமகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் குழந்தை மாரி, நிலைய அலுவலர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இரயில் என்ஜினுக்கு பூசைகள் செய்யப்பட்டன.

அதன்பிறகு, பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு இரயில் எஞ்சின் சென்று சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பொள்ளாச்சி வந்தடைந்தது.

பொள்ளாச்சியில் இருந்து கோவில்பாளையம், முள்ளுப்பாடி, தாமரைக்குளம் வழியாக கிணத்துக்கடவுக்கு இரயில் எஞ்சின் இயக்கப்பட்டது. இதில் முள்ளுப்பாடியில் இரயில்வே கேட் அமைக் கப்படாததால் இரயில் எஞ்சின் வரும்போதும், போகும்போதும் பாதுகாப்பு பணியில் இரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

கிணத்துக்கடவு இரயில் நிலையம் தரைமட்டத்தில் இருந்து 33 அடி உயரத்தில் அமைந்து உள்ளதால் எஞ்சின் வந்த போது எழுந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்தனர்.

கிணத்துக்கடவு இரயில் நிலையத்தில் தண்டவாளம் உறுதியுடன் அமைக்கப்பட்டு உள்ளதா?, பொள்ளாச்சி – கிணத்துக்கடவு இடையே 40 இரயில்வே பாலங்கள் உள்ளன. அவற்றை கடக்கும் போது ஏதேனும் குறைபாடு உள்ளதா? என்பது உள்ளிட்ட அம்சங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பொள்ளாச்சி – கிணத்துக்கடவு இடையே இரயில் எஞ்சின் சோதனை ஓட்டம் வெற்றிப் பெற்றதில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.