சென்னை ரோட்டில் வைத்து ரூ.50 ஆயிரத்துக்கு யானை தந்தத்தை கூவி கூவி விற்ற வாலிபரை, வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்த யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர்.

அடையாறு காந்தி நகர் பகுதியில், ரோட்டில் வைத்து யானை தந்தம் விற்கப்படுவதாக சாஸ்திரி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாறு வேடத்தில் சென்று அப்பகுதியில் கண்காணித்தனர்.

அப்போது ஒரு வாலிபர், ஒரு பெரிய பையுடன், சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தார். அவரை போலீசார் அழைத்தபோது, அங்கிருந்து தப்பியோடினார். உடனே உஷாரான போலீசார், வாலிபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, 2 யானை தந்தம் உள்பட பல்வேறு விலங்கு தோல், எலும்பு உள்ளிட்டவை இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து, அவரையும், தந்தம் உள்ளிட்ட பொருட்களையும் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள், வாலிபரிடம் விசாரித்தனர்.

அதில், பிராட்வே பிடாரியார் கோயில் தெருவை சேர்ந்த முருகன் (34). சென்னை துறைமுக சுங்கத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் உதவியுடன், கிடங்கில் உள்ள பல அரியவகை பொருட்களை திருடி, நுழைவாயிலில் உள்ள குப்பை தொட்டியில் போடுவார்.

பின்னர் குப்பையை அகற்றுவது போல் அவற்றை எடுத்து விற்பனை செய்கிறார். அதேபோல், யானை தந்தத்தை விற்க முயன்ற போது அவர் சிக்கியது தெரிந்தது. மேலும், ஒரு யானை தந்தத்தின் விலை ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்தால், 5 ஆயிரம் கமிஷன் கிடைக்கும் என அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.