Asianet News TamilAsianet News Tamil

மின் வாரிய அலுவலகத்தை குடும்பத்தோடு முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளி போராட்டம்...

Electricity Board Office has been blocked by family of physically challenged
Electricity Board Office has been blocked by family of physically challenged
Author
First Published Jan 30, 2018, 8:46 AM IST


திருவள்ளூர்

திருவள்ளூரில், பெட்டிக்கடைக்கு மின் இணைப்பு தராமல் அலைக்கழித்ததால் மன உளைச்சல் அடைந்த மாற்றுத்திறனாளி தனது குடும்பத்தோடு மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (35). இவர், கண் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. இவர், வெங்கல் - சீத்தஞ்சேரி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

அறுபது சதவீதம் கண் பார்வை குறைபாடுடைய செல்வக்குமார், மாற்று திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் சாலை புறம்போக்கு இடத்தில் உள்ள தனது கடைக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்குமாறு கோரிக்கை மனுவை அளித்தார்.

அதன்பேரில் திருவள்ளூர் தாசில்தார், சாலை புறம்போக்கு இடத்தில் உள்ள செல்வக்குமாரின் கடைக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்குமாறு மின்வாரிய உதவி பொறியாளருக்கு கடிதம் அனுப்பினார்.

ஆனால், அந்த கடிதத்திற்கு உரிய மதிப்பு அளிக்காமல் மின் இணைப்பு வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், மிகுந்த மன உளைச்சல் அடைந்த செல்வக்குமார் நேற்று மதியம் தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துக்கொண்டு வெங்கல் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கே, மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்த வெங்கல் காவலாளர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் செய்தனர். மேலும், மின் வாரிய அதிகாரிகளிடம் இதுபற்றி பேசினர்.

அதற்கு மின்வாரிய அதிகாரிகள், "தற்காலிக மின் இணைப்பு வழங்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கடிதம் வாங்கிக் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அடம்பிடித்தனர்.

இவ்வாறு சொன்னபிறகு நெடுஞ்சாலைத்துறையிடம் கடிதம் வாங்கி வரணுமா?  என்று நொந்துக் கொண்டு முற்றுகையை கைவிட்டு செல்வக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அமைதியாக கலைந்து சென்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios