பெரம்பலூர் 

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 240 சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதால் சங்கத்தின் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டுறவு தேர்தலில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் அந்தோணிசாமி ஜான்பீட்டர் முன்னிலை வகித்தார். 

பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை, பால் வளத்துறை உள்பட 240 சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், வேட்பு மனு பெறுதல், வாக்குப்பதிவு உள்ளிட்ட பணிகளில் கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த 360 அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா, "தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து சங்கங்களுக்கும் முறையாக உறுப்பினர் பட்டியலை தயாரித்து, அதனடிப்படையில் தகுதியான வாக்காளர் பட்டியல் வெளியிட்டு, அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். 

வாக்காளர் பட்டியல் மீது, உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் மறுப்புகளை தெரிவிப்பதை தொடர்ந்து, இவற்றை பரிசீலித்து வாக்காளர் பட்டியல் அலுவலர் இறுதியான வாக்காளர் பட்டியலை சங்கத்தில் வெளியிடுவார்.

இதனைத் தொடர்ந்து நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் பணி தொடங்கி போட்டி இருப்பின் வாக்குப்பதிவு நடத்தப்படும். எனவே, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைத்து அலுவலர்களும், தேர்தல் தொடர்பாக தங்களுக்குள்ள சந்தேகங்களுக்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர், கூட்டுறவு சங்க மண்டல இணை பதிவாளர் அவர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.