திருவள்ளூர்

பொன்னேரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட எட்டு ஆட்டோக்களை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர் மற்றும் அவர்களிடம் ரூ.40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி இரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை, தேரடி சாலை ஆகிய இடங்களில் ஆட்டோ நிறுத்தங்கள் உள்ளன.

இங்குள்ள ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றியும், ஓட்டுநர்கள் சிலர் சீருடை அணியாமலும், சாராயம் குடித்துவிட்டும் ஆட்டோக்களை இயக்கி விபத்து ஏற்படுத்துகின்றனர் என்று பொன்னேரி காவலாளர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு புகார்கள் சென்றன.

இந்த நிலையில், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் உத்தரவின்பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், ராஜேந்திரன் ஆகியோர் பொன்னேரி புதிய பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை அருகே உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, பதிவுச்சான்று, காப்பீடு உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த எட்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிகளை மீறி, ஆட்டோக்களை இயக்கிய ஓட்டுநர்களிடம் ரூ.40 ஆயிரம் அபராதத் தொகை வசூலிகப்பட்டது.