கைத்தறித் தொழிலில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கில் 3 ஆவது தேசிய  கைத்தறி தின விழா வில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, தமிழகத்தில் விரைவில் ஒருங்கிணைந்த புதிய ஜவுளிக் கொள்கை உருவாக்கப்படும் என தெரிவித்தார்.

எழுத்தாளர்களைப் போன்று, நெசவாளர்களும் நாட்டுக்கு மிகவும் முக்கியம் என்றும் தேசப்பற்றுக்கு அடையாளமாக கைத்தறி ஆடைகள் திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்கி வருவதாகவும், வரும் பொங்கல் தினத்தில் தமிழகத்தில் 3 கோடியே 36 லட்சம் பேருக்கு கைத்தறி சேலைகள் மற்றும் வேட்டிகள் வாங்கப்படும் என தெரிவித்தார்.

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய தொழிலிலாக கைத்தறித் தொழில்  திகழ்வதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.