Election 2024:நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற வல்லவர்களை, நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியமான நாள்-எடப்பாடி
இன்றைய தேர்தலில் புதிய தலைமுறை வாக்காளர்கள் இளைஞர்கள், பெண்கள், தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடதை ஆற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்
வாக்குப்பதிவு தீவிரம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது வாக்கை செலுத்துவதற்காக சேலத்தில் உள்ள சிலுவம்பாளையம் வீட்டில் இருந்து எடப்பாடி ஊராட்சி ஒன்றிய சிலுவம்பாளையம் ஊராட்சி துவக்க பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு நடந்து சென்றார். அப்போது அவரது மனைவி ராதா, மகன் மிதுன் மருமகள் திவ்யா ஆகிய குடும்பத்தாருடன் வரிசையில் நின்று காத்திருந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
வாக்காளர்களுக்கான கடமை
அப்போது செய்தியாளர் சந்திப்பில் மக்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று உங்களது வாக்கினை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதனிடையே முன்னதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உலகின் மிகப்பெரிய மக்களாட்சித் திருவிழாவாம் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் இன்று. மக்களாட்சியின் அடித்தளமாம் நம் வாக்குரிமையை நிலைநாட்டும் மகத்தான நாள் இன்று.
நமக்கான உரிமைகளை கேட்டுப் பெற வல்லவர்களை, மக்களாட்சியின் விழுமியங்களைக் காத்திடும் நல்லவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியமான நாள் இன்று. ஆதலால், அனைவரும் தவறாது தங்களது வாக்குச்சாவடிகளுக்கு சென்று, தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.