அ.தி.மு.கவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுச் செயலாளர் பதவி தொடங்கி கிளைச் செயலாளர் பதவி வரை தேர்தல் மூலமாகவே அ.தி.மு.கவில் நியமிக்கப்பட வேண்டும் என்பது தான் விதிமுறை. இதே போல் அமைப்பு தேர்தலுக்கு முன்னதாக அதாவது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டியதும் கட்டாயம்.
   
அதன்படி கடந்த 2013ம் ஆண்டு அமைப்பு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் எந்த பதவிக்கும் போட்டி இல்லாத காரணத்தினால் பொதுச் செயலாளர் தொடங்கி அனைத்து பகுதி  நிர்வாகிகளும் ஜெயலலிதா விருப்பப்படி தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அமைப்பு தேர்தல் முடிந்து 5 ஆண்டுகள் முடிந்த நிலையில் விதிப்படி தற்போது தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன்னதாக உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும்.
   
அந்த வகையில் புதுப்பிக்கப்பட்ட அட்டைகள் உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பி.எஸ்., முதலமைச்சரும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான ஈ.பி.எஸ் உள்ளிட்டோர் கட்சி அலுவலகம் வந்து உறுப்பினர் அட்டையை வழங்கினர்.


   
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது கட்சியில் சசிகலா இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ.பி.எஸ்., பொதுக்குழுவில் வைத்தே பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதாக பதில் அளித்தார். அதற்கு அ.தி.மு.கவில் சசிகலா இருக்கிறாரா இல்லையா என்ற கேட்டால் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக சொல்கிறிர்களே என செய்தியாளர்கள் பதில் கேள்வி எழுப்பினர்.
   
ஆனால் அந்த கேள்விக்கு ஓ.பி.எஸ் பதில் அளிக்க தயங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பதில் அளிக்க தயாராக இல்லை. ஆனால் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி மைக்கை வாங்கி, அ.தி.மு.க விதிப்படி உறுப்பினர் அட்டையை புதுப்பிக்காதவர்கள் கட்சியில் நீடிக்க முடியாது என்று பதில் அளித்தார். மேலும் வேறு கட்சிக்கு சென்றவரும் அ.தி.மு.கவில் நீடிக்க இயலாது என்று கே.பி.முனசாமி குறிப்பிட்டார்.

தற்போது சசிகலா அ.ம.மு.கவில் பொதுச் செயலாளராக இருப்பதால் இயல்பாகவே அ.தி.மு.கவின் உறுப்பினர் என்கிற உரிமையை சசிகலா இழந்துவிட்டதாக கூறிய முனுசாமி, உறுப்பினர் அட்டையையும் சசிகலா புதுப்பிக்காத காரணத்தில் அவர் அ.தி.மு.கவில் இல்லை என்பது உறுதியாகிவிட்டதாகவும் தெரிவித்தார். இதனை முனுசாமி  சொல்லிய போது அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த பலர் கைதட்டி முழக்கமிட்டனர்.
   
ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே கே.பி.முனுசாமி பேச ஆரம்பித்தது முதல் தலை குனிந்த நிலையிலேயே அமர்ந்திருந்தார். கே.பி.முனுசாமி பேசி முடித்த பிறகு தான் குனிந்த தலையை எடப்பாடி பழனிசாமி நிமிர்த்தினார்.