ஜெயலலிதாவின் ஆட்சி வந்தாலே தமிழக போலீஸுக்கு எக்ஸ்ட்ரா கொம்பு முளைத்துவிடும். ஏற்கனவே பெரும் அதிகார பலத்துடன் வலம் வரும் போலீஸ், ஜெ., ஆட்சியில் ட்ரிபிள் எக்ஸ்ட்ரா பராக்கிரமத்துடன் நடந்து கொள்வார்கள். 
இந்த ஆட்சியில் தமிழக போலீஸ் இரண்டு லெவல்களிலும் பயன்படுத்தப்படும். அதாவது அதிகார மையத்துக்கு ஒத்துவராத நபர்கள் மீது கஞ்சா, ஹெராயின் வழக்குகளை போட்டு உள்ளே தள்ளுவதற்கும் பயன்படுத்தப்படும். அதேபோல் சமூக விரோதிகளை என்கவுன்டர் செய்யும் அதிகாரமும் போலீஸுக்கு வழங்கப்படும். 

இதனால் ஜெயலலிதா அரியணையில் இருந்தாலே சமூக விரோதிகளுக்கு, தங்கள் தலை மேல் துப்பாக்கி முனை இருப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.

இந்நிலையில்  ஜெயலலிதா மரணத்துக்குப் பின் கட்சியிலும், ஆட்சியிலும் ஏகப்பட்ட குழப்பங்கள் நிகழ்ந்து பின் கடந்த சில மாதங்களாகத்தான் ஆட்சி வண்டி அல்லல் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டது கண் கூடு. சென்னை, நெல்லை என அனைத்து திசைகளிலும் கொலைகள் அதிகரித்தன. 
மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனே தமிழகத்தின் சட்டஒழுங்கு பிரச்னை குறித்து கவலைப்படும் வகையில் நிலைமை மோசமானது.

ஆனால் ‘தமிழகம் அமைதிப் பூங்காவாக செயல்படுகிறது!’ என இரு முதல்வர்களும் அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருந்தனர். இதை சமூக வலைதளங்களில் விமர்சகர்கள் ஆதாரத்துடன் வைத்து பொளந்து கட்டினர். 

இந்நிலையில்தான் நேற்று மதுரையில் மந்திரி, கார்த்திக் எனும் இரண்டு கொலை கிரிமினல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது தமிழகமெங்கும் குற்றச்செயல் புரிவோர் மத்தியில் பெரும் பயத்தைக் கிளப்பியுள்ளது. 

முதல்வர்களை சட்ட ஒழுங்கு பிரச்னைக்காக விமர்சித்த இணையதள விமர்சகர்கள், போலீஸ் இப்படி சுட்டு சுட்டு தீபாவளி கொண்டாடியதை கொண்டாடி வரவேற்றுள்ளனர். ஜெயலலிதா போல் செண்டிமெண்டு விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வரும் முதல்வர் பழனிசாமி அவரை போலவே ரவுடிகளை என்கவுன்டர் செய்யவும் போலீஸுக்கு அதிகாரம் கொடுத்துள்ளதால், எடப்பாடியாரை செல்லமாக ‘இன்று முதல் நீர் என்கவுன்டர் ஏகாம்பரம்! என பெருமையோடு அழைக்கப்படுவீராக!’ என்று புகழ்ந்து பாடியுள்ளனர்.