சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது நடந்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் மற்றும் நளினியை பரோலில் விடுவது தொடர்பாக ஆலோசனை நடத்துவதாக தெரிகிறது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

அவரை பரோலில் விட வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள், தமிழக முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என பலருக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

அதேபோல், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, லண்டனில் உள்ள தனது மகளின் திருணத்துக்காக 6 மாதம் பரோலில் விட வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், அரசு அதற்கான பதில் எதையும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, தமிழக அரசுக்கு, தன்னை பரோலில் அனுப்ப உத்தரவிடும்படி கோரிக்கை வைத்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நளினியை பரோலில் அனுப்புவது குறித்து, தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு பரோல் வழங்குவது தொடர்பாக பேசப்படுவதாக கூறப்படுகிறது.