திருவள்ளூர், புதுகோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த கடலில் மூழ்கி உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாக்குமரி மாவட்டம் கடலோர மாவட்டங்களை சேர்ந்த ஜோசப் சுகந்தன், ஜார்ஜ் அந்தோணி, அருள் நெவில் ஆகியோர் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், 3 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், ஜோசப் சுகந்தன், ஜார்ஜ் அந்தோணி ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்க பட்டது. ஆனால் அருள் நெவில் உடல் கண்டெடுக்க முடியவில்லை.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரான்சிஸ், ரோஷன் ஆகியோர் மீன்பிடித்து கொண்டிருந்தபோது கட்டுமரம் கவிழ்ந்து கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமமூர்த்தி, பாவாடை சாமி ஆகியோர் கடலின் அலை வேகத்தால் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் இருவரும் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வேலு, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரத்தினம், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெத்தபெருமாள் ஆகியோரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில், மேற்கண்ட உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.