சமீபகாலமாக சென்னை உட்பட்ட முக்கிய நகரங்களில் 3 மணி 4 மணிக்கே அதிகாலைக் காட்சிகள் போடும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இது முறைப்படி அரசின் அனுமதி பெற்று நடைபெறுகிறதா அல்லது கோல்மால் வேலையா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார்? என பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர், தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வார நாட்களில் 4 காட்களும், விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரைப்படங்களை திரையிட தமிழக அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அனுமதியை மீறி, புதிய படங்கள் ’செக்க சிவந்த வானம், சாமி – 2, ’சீமாராஜா’ ஆகிய திரைப்படங்கள் விடுமுறை நாட்களில் காலை 4 மணிக்கே ஆரம்பித்து 7 காட்சிகள் வரை நடக்கின்றன.

இது விதிகளுக்கு எதிரானது. திரையரங்குகளில் எப்போது காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளை அரசு வகுத்துள்ளது. எனவே அந்த விதிகளை மீறி அதிக காட்சிகள் ஒளிபரப்பும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். மணிக்குமார், பி.டி. ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விடுமுறை நாட்களில் 6 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.

 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை என மனுதாரருக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் முறையான ஆதாரங்கள் இல்லாமல் மனு தாக்கல் செய்யபட்டுள்ளதாக நீதிபதிகள் மனுதாரர்க்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார்? என தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும் என்று கூறி வழக்கை அடுத்த அக்டோபர் 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.