duplicate conductors in field and people afraid of get tickets
தற்காலிக நடத்துநர்கள் என்ற பெயரில் போலி நடத்துநர்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ச்சியாக 8வது நாளாக இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, வேலைநிறுத்தத்தை கைவிட மறுத்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும்வரை, மக்களின் இன்னலைப் போக்க தற்காலிக ஊழியர்களை போக்குவரத்து துறை பணியமர்த்தியுள்ளது.
பல இடங்களில் பேருந்துகளை சரியாக இயக்க தெரியாமல், தற்காலிக ஓட்டுநர்கள் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அரசு பேருந்துகளில் ஏறவே பொதுமக்கள் பயப்படுகின்றனர். அரசு பேருந்துகளை கண்டாலே பொதுமக்கள் தலை தெறித்து ஓடும் அவலநிலை உருவாகியுள்ளது.
தற்காலிக ஓட்டுநர்கள், பேருந்தை ஓட்ட தெரியாமல், மக்களை அச்சுறுத்துகிறார்கள் என்றால், தற்காலிக நடத்துநர்கள் என்ற பெயரில் சில இடங்களில் போலி நடத்துநர்களும் தலைதூக்க தொடங்கியுள்ளனர்.
நாகை-திருவாரூர் அரசு பேருந்தில், தற்காலிக நடத்துநர்கள் என்ற பெயரில் பயணிகளிடம் இருவர் டிக்கெட் வசூலித்துள்ளனர். ஆண்டிப்பாளையம் பகுதியில் டிக்கெட் பரிசோதகர்களை கண்டவுடன் ஒருவர் தப்பியோடியுள்ளார். மற்றவர் பிடிபட்டார். பிடிபட்டவர் போலி நடத்துநர் என்பது தெரியவந்தது. பயணிகளிடம் வசூலித்த பணத்துடன் தப்பியோடிய போலி நடத்துநரை போலீசார் தேடிவருகின்றனர்.
தற்காலிக ஊழியர்கள் என்ற பெயரில் தமிழகத்தில் நடக்கும் அவலங்கள், நாளுக்கு நாள் மிக மோசமாகிக் கொண்டே இருக்கின்றன. ஆகமொத்தத்தில் அனைத்து வகையிலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
