சென்னை நகரில் போக்குவரத்து சிரமங்களை குறைக்க மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. இதைதொடர்ந்து வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல், அண்ணாசாலை, சைதாப்பேட்டை வரை பூமிக்கு அடியில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கடந்த வாரம் அண்ணாசாலை ஆயிரம் விளக்கு பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனை மெட்ரோ அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைத்தனர். அதை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் மெகா பள்ளம் ஏற்பட்டது.


இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை பூமிக்கு அடியில் ரயில் சேவைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.


பயன்பாட்டுக்கு வந்த பின்னர், தினமும் சுமார் இரண்டரை லட்சம் பேர் பயணம் செய்யலாம். பூமிக்கு அடியில் செல்லும் ரயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மழை வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பு வந்தாலும், அதனை தடுக்கும் விதமாக அனைத்து பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டும்போது ஏற்பட்ட மண் சரிவு காரணமாக திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதை சரி செய்துவிட்டோம். இதன் பிறகு இதுபோல் நடக்காமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.