தருமபுரி

தர்மபுரியில் கொளுத்தும் கோடை வெயிலால் தங்களது சூட்டைத் தணித்துக் கொள்ள மக்கள் சாலையோரங்களில் விற்கப்படும் பழச்சாறுகளும், நுங்கு, தர்பூசணி போன்ற பழங்களின் விற்பனையும் சூடு பிடித்துள்ளது. 

கோடை காலம் தொடங்கிவுள்ள நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கூடிக்கொண்டே  போகிறது. அதிலும், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது.

அதன்படி, வெயில் அளவு 100 டிகிரியை தொட்டது. வெயில் கொளுத்துவதால் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. 

இந்த நிலையில், வெயிலால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க நீர்மோர், பழரசம், கூழ், கற்றாழை சாறு, முலாம் பழம், தர்பூசணி போன்றவற்றை மக்கள் நாடி செல்கின்றனர். இதனால் பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தர்மபுரி நகரில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை தற்போது சூடு பிடித்து உள்ளது. 

தர்மபுரி நெசவாளர் நகர் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் நுங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் சேலம் மாவட்ட மேச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தர்மபுரி நகருக்கு நுங்கு கொண்டு வரப்படுகிறது.

கடந்த ஆண்டு மூன்று நுங்கு ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைவு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பால் ஒரு நுங்கு ரூ.5 என்ற விலையில் விற்கப்படுகிற நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.