ஈரோடு 

ஈரோட்டில், கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், ஒட்டப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை கிழித்து அ.தி.மு.க.வினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். காரணம் கேட்டு ரகளையில் ஈடுபட்டதால் அ.தி.மு.க.வினருக்கும், காவலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

ஈரோடு வீரப்பன்சத்திரம் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தில் கடந்த முறை தலைவராக இருந்த அ.தி.மு.க. நிர்வாகி எம்.ஜி.பழனிசாமியும், அவருடன் சேர்ந்து என்.நந்தகோபால், சென்னியப்பன், எம்.சி.பழனிசாமி, அமுதா, கலாமணி, முத்துசாமி என மொத்தம் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல அ.தி.மு.க.வைச் சேர்ந்த நல்லசாமி, தர்மலிங்கம், சண்முகபிரியா, சண்முகம், மனோகரன் உள்பட ஆறு பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களுடைய வேட்பு மனு பரிசீலனை நேற்று நடைபெற்றதால் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் சங்க அலுவலகம் முன்பு கூடியிருந்தனர்.

இந்த நிலையில் மாலை 5 மணியளவில் வேட்பாளர்கள் பட்டியல் அலுவலகம் முன்பு ஒட்டப்பட்டது. அதில் நல்லசாமி மற்றும் அவர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்த மொத்தம் ஆறு பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதனால் எம்.ஜி.பழனிசாமி தலைமையில் வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

எனவே, அவர்கள் வேட்பு மனுவை நிராகரிப்பு செய்ததற்கான காரணத்தை கேட்டனர். மேலும் எம்.ஜி.பழனிசாமிக்கு ஆதரவாக ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி ஆதரவாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அதுமட்டுமின்றி அங்கிருந்த அ.தி.மு.க.வினர் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலையும் கிழித்து எறிந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரப்பன்சத்திரம் காவலாளர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால், கட்சியினர் தொடர்ந்து அங்கேயே நின்றுகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து அவர் களை அங்கிருந்து காவலாளர்கள் வெளியேற்றினார்கள். அப்போது கட்சியினருக்கும், காவலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றி சங்க அலுவலக கதவை காவலாளர்கள் மூடினார்கள்.