தனது தாயின் மரணத்துக்கு செல்ல அனுமதி மறுத்த நிறுவனத்துக்கு எதிராக துபாய் நீதிமன்றத்தில் நீதிகேட்டு தமிழர் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடாய், நடந்து கொண்டு இருக்கிறார்.
நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணையின் போது வந்து செல்வதற்கு கையில் காசு(திர்ஹாம்) இல்லாததால், நடந்தே வழக்கைச் சந்தித்து வருகிறார் இந்த மனம் தளராத தமிழன்.
திருச்சியைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன் செல்லவராஜ் (வயது48). இவர் துபாயில் உள்ள கராமா மாவட்டத்தில ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வேலைக்கு சேர்ந்தார். ஆனால், வேலைக்கு சேர்ந்த சில மாதங்களில் ஜெகந்நாதனின் தாய் மரணமடைந்ததார்.
அந்த தகவல் கேட்டு, தாயின் ஈமச்சடங்குக்கு சொந்த ஊருக்கு செல்ல நிறுவனத்தில் ஜெகந்நாதன் அனுமதி கேட்டார். அதற்கு அந்த நிறுவனம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, துபாயில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தின் கதவைத்தட்டி ஜெகந்நாதன் நீதிகேட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 2 ஆண்டுகளாக செல்வராஜ் தங்குமிடத்துக்கும், நீதிமன்றத்துக்கும் நடந்து கொண்டு இருக்கிறார்.
இது குறித்து துபாயில் வெளிவரும் “கலீஜ் டைம்ஸ்” நாளேட்டுக்கு ஜெகந்நாதன் செல்வராஜ் அளித்த பேட்டியில் கூறுகையில், “ என் தாய் இறந்தபின், ஈமக்காரியத்துக்கு செல்வதற்குகூட நான் வேலை செய்த நிறுவனம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால், கராமா நகரில் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் நீதிகேட்டு வழக்கு தொடர்ந்தேன்.
நான் கராமா மாவட்டம், சோனாப்பூர் என்ற இடத்தில் தங்கி இருக்கிறேன். நான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து கராமா நகர் 50 கி.மீ தொலைவில் இருக்கிறது. மெட்ரோரெயில், அரசு பஸ்ஸில் செல்வதற்கு என்னிடம் காசு(திர்ஹாம்) இல்லை. இதனால், வழக்குக்காக கடந்த 2 ஆண்டுகளாக கராமா நகரில் உள்ள தொழிலாளர் நீதிமன்ற விசாரணைக்காக நடந்தே சென்று வருகிறேன்.
என்னுடைய வழக்கு எண் 826 ஆகும். 15 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும். அப்போது, அந்த விசாரணைக்கு செல்லும் வகையில், அதிகாலை 4 மணிக்கு எழுந்து நடக்கத் தொடங்குவேன். ஏனென்றால், அப்போதுதான் வெயில் இருக்காது.
அல்குவாசிஸ், அல்நதா, ஏல்போர்ட் ப்ரீ ஜோன் ஆகிய பகுதிகளைக் கடந்து 2 மணிநேரம் நடந்து கராமா நகருக்குச் செல்வேன். அதிவேக சாலைப் போக்குவரத்து, கடும்பாலைவனக் காற்று, கொளுத்தும் வெயில், அனல்காற்று ஆகியவற்றுக்கு மத்தியில் 15 நாட்களுக்கு ஒரு முறை 4 மணிநேரம் நடந்து செல்கிறேன்.
எனக்கு இங்கு உதவி செய்ய யாரும் இல்லை. கையில் பணமும் இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளில் 50 கிலோமீட்டர் தொலைவை 20-க்கும் மேற்பட்ட முறைகள் நடந்தே கடந்து இருக்கிறேன். நீதி தாமதமாகிக் கொண்டே இருக்கிறது” என வருத்தத்துடன், கண்களில் கண்ணீர் மிதக்க தெரிவித்தார்.
ஜெகந்தானுக்கு உதவிசெய்ய முயன்று வரும் சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த பேட்டியில், “ ஜெகந்நாதன் தனது சொந்த ஊருக்குச் செல்ல துடித்துக்கொண்டு இருக்கிறார். இவரைப் போல் இவரின் நண்பர்கள் பலர் தங்குவதற்கு இடம் இல்லாமல், அரசின் பூங்காக்களில் பிச்சைகாரர்கள் போல் தங்கி இருக்கிறார்கள்.
இவர்கள் எல்லாம் நடந்தே இந்தியாவுக்கு செல்ல முடியாது. இவர்களுக்கு தேவை இந்திய அரசு சார்பில் ஒரு விமான டிக்கெட் மட்டும்தான்” என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.
