குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் தம்பியை சுட்டுகொன்றுவிட்டு அண்ணன் சண்முகம் தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள தேவரபெட்டா கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா. இவரது தம்பி கணேஷ். விவசாயிகள். இவர்கள் ஒரே பகுதியில் வசித்து வருகிறார்கள். நேற்று யுகாதி பண்டிகையை முன்னிட்டு ஊரில் திருவிழா நடைபெற்றது. அந்த சமயத்தில் இருவரும் மது குடித்தனர். போதையில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியதால் இருவரும் அடித்து மாய்ந்துக் கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த சங்கரப்பா வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து தனது தம்பியை சுட்டார். இதில் தம்பியின் கழுத்து பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் நிலைகுலைந்த போன அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

துப்பாக்கி குண்டு துளைத்த கழுத்து பகுதியில் இருந்து ரத்தம் மளமளவென பீறிட்டு வெளியேறி கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தம்பி இறந்து விட்டதை உறுதி செய்த சங்கரப்பா இனிமேல் இங்கிருந்தால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள். எனவே போலீசாரின் கண்களில் சிக்காமல் எங்காவது தப்பி சென்று விடலாம் என கருதி அங்கிருந்து துப்பாக்கியுடன் அவர் தப்பி ஓடி விட்டார்.

குடிபோதையில் அண்ணன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் ஊர் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது. இதனை தொடர்ந்து அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடினர்.

இது பற்றி தகவல் அறிந்த தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி லைசென்ஸ் பெறாத துப்பாக்கி என்பதும், தேவரபெட்டா பகுதி மலை கிராமம் என்பதால் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக உரிமம் பெறாத அந்த துப்பாக்கியை யாருக்கும் தெரியாமல் ரகசியதாக அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்தார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேவரபெட்டா ஊரை சுற்றிலும் காடுகள் உள்ளன. எனவே சங்கரப்பா துப்பாக்கியுடன் காட்டுப் பகுதியில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் போலீசார் வன ஊழியர்களின் உதவியோடு காட்டுக்குள் சென்று சங்கரப்பாவை தேடி வருகின்றனர்.