Asianet News TamilAsianet News Tamil

இருளில் மூழ்கிய கிராமம்; புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் சாலை மறியல் போராட்டம்…

Drowning in the dark People protest road traffic scam
Drowning in the dark People protest road traffic scam
Author
First Published Oct 21, 2017, 8:15 AM IST


அரியலூர்

அரியலூரில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் கிராமம் இருளில் மூழ்கியது. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் உள்ள செல்லாண்டித் தெரு, கொள்ளிடப்பாதைத் தெரு, வேளார் தெருக்களில் வசிப்போருக்கு அங்குள்ள இராண்டு மின்மாற்றிகளில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்பு ஒரு மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் மற்றொரு மின்மாற்றிலிருந்து மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான நேரங்களில் குறைந்தளவு மின்சாரமே கிடைத்தது. இதனால் மின்சாதனப் பொருள்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு மக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது இயங்கி வந்த மின்மாற்றியும் சில நாள்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

அப்பகுதி மக்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சினம் கொண்ட மக்கள் ஏலாக்குறிச்சியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமானூர் காவலாளர்கள், ஏலாக்குறிச்சி கிளை மின்துறை அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், விரைவில் மின்மாற்றி பழுது நீக்கி மின் விநியோகம் செய்யப்படும், அதுவரை மாற்று வழியில் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

அந்த உறுதியின்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் ஏலாக்குறிச்சி - திருமானூர் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios