நிலவேம்பு கசாயம் குடித்தால், தங்கம், சில்வர் குடம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்படும் என்று நெல்லையில் அதிமுக பிரமுகர் அறிவித்துள்ளது அப்பகுதி மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.  

டெங்கு பாதிப்பில் இருந்து மீளும் வகையில், நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய இருப்பதுடன், அதை குடித்துப் பயன் அடைபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பரிசுகளும் அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மாநகராட்சி 8-வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டவர் தங்கதுரை. இவர் பழக்கடை வியாபாரம் செய்து வருகிறார். 

மக்களுக்கு உதவிகள் செய்யும் வகையில் அவர்களின் தேவைகளுக்காக அதிகாரிகளைச் சந்திப்பது, குடிநீர் தேவைகளை தீர்த்து வைப்பது என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், நிலவேம்பு கசாயம் விநியோகிக்கும் முகாம் நடத்த திட்டமிட்டுள்ளார்.

தங்கதுரை. தினமும் கசாயம் குடிப்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு சில்வர் குடம் பரிசாக வழங்கப்படும் எனவு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் பரிசாக ஒரு கிராம் தங்கமும், 2 ஆம் பரிசாக அரை கிராம் தங்கமும், 3 ஆம் பரிசாக10 கிராம் வெள்ளியும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டரை, அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்ப்பதுடன், மற்றவர்களுக்கும் இது குறித்து தெரிவித்து வருகின்றனர்.