Drainage mixed with drinking water pipe People road block protest...

சேலம்

சேலத்தில், ஊராட்சிக் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவு தண்ணீர் கலந்ததால் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் சினம் அடைந்த கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், சலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் ஊராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக, காவிரி கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட குடிநீர் தொட்டி உள்ளது.

இந்தத் தொட்டியில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டுச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக இந்தப் பகுதியில் சேரும் கழிவுநீர், குடிநீர் தொட்டி அருகே தேங்கி நின்று குடிநீரில் கலப்பதாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.

ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் வெளியேற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அந்தப் பகுதி மக்கள் நேற்று காலை 9 மணியளவில் சலகண்டாபுரம் - ஆடையூர் சாலையில் ஐயன்ஏரி அருகே திரண்டு வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், "சாக்கடை கழிவுநீர் தேங்காமல் வடிகால் வசதி செய்து தரவேண்டும்" என்று முழக்கங்களை எழுப்பினர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படவில்லை. பின்னர், ஆவடத்தூர் ஊராட்சி செயலாளர் ஞானதுரை சம்பவ இடத்திற்கு வந்து பொக்லைன் எந்திரம் மூலமாக சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ள இடத்தில் இருந்து கால்வாய் அமைத்து கழிவுநீரை வேறு பகுதிக்கு கொண்டுச் செல்ல உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அதன்பின்னரே சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.