திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் டாக்டர் இளஞ்சேரன். இவரின் மனைவி திவ்யா கடந்த 17 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். முதற்கட்ட விசாரணையில் திவ்யா அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், திவ்யாவின் கணவர் டாக்டர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வரதட்சனை கொடுமையால் திவ்யா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட கணவர் இளஞ்சேரன், மாமனார், மாமியார் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்து, அவர்களை மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார்குடியின் பிரபல வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஆறு பேர்
நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

திவ்யாவின் கணவர் இளஞ்சேரன், மாமனார் முத்தழகன், மாமியார் ராணி ஆகியோரை போலீஸ் காவலுக்கு அனுப்பக்கூடாது என்று ஆறு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

ஆனால், நீதிபதி மூன்று பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், திவ்யா கொலையில் மாமியார் ராணியின் அண்ணனும், திருவாரூர் உணவு கடத்தல் தடுப்புப்
பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் சிவக்குமார் என்பவருக்கும், கரூரைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டனர்.

கொலை நடைபெற்ற அன்று திவ்யா மற்றும் மாமனார் வீட்டில் இருக்க அங்கு உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கரூர் செந்தில்குமார் ஆகியோர் சென்றுள்ளனர். அத்துடன் முத்தழகனுடன் சேர்ந்து சிவக்குமாரும்,
செந்தில்குமாரும் திவ்யாவை கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளனர்.

திவ்யாவை கொலை செய்துவிட்டு மகன் இளஞ்சேரனுக்கு கூடுதல் வரதட்சணையுடன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் விசாரணை முடிவடைந்த நிலையில் மூன்று பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொலை செய்ததாக கூறப்படும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கரூர் செந்தில்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.