சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவில் சந்தேகம் இருப்பதாக ஜோசப் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். அதுவரை அவருக்கு அந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்தது. மேலும் ஜெயலலிதா, நடைபயிற்சி மேற்கொள்கிறார். உணவு சாப்பிடுகிறார் என மருத்துவமனையும், அதிமுகவும் தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டது.

ஆனால், அவருக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. அதேபோல் அவருக்கு சிகிச்சை அளிப்பதுபோன்ற புகைப்படமோ, வீடியோ காட்சிகளோ பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் காட்டப்படவில்லை. இதனால், அவரது இறப்பில் மர்மம் உள்ளது என கூறினார்.

இதை கேட்ட நீதிபதி வைத்தியநாதன், தனக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பில் தனிப்பட்ட சந்தேகம் இருப்பதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில், 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட ஜெயலலிதாவின், புகைப்படம் ஏன் வெளியிடவில்லை. மருத்துவ அறிக்கையும் தெரிவிக்கவில்லை.

ஜெயலலிதா இறப்பதற்கு முன், எதற்காக அதிமுக கூட்டம் நடந்தது. அவர் இறந்த அதே நாளில் எதற்காக பதவியேற்பு நடத்தப்பட்டது. அதேபோல், ஜெயலலிதாவின்ன கன்னத்தில் 4 துளைகள் இருந்தன. அது எப்படி வந்தன. இறுதி சடங்கின்போது, அவரது கால்கள் இல்லை. துண்டிக்கப்பட்டுவிட்டது என பரபரப்பாக பேசப்பட்டது. அதுபற்றி ஏன் விளக்கம் அளிக்கவில்லை. இதுபற்றி ஏன் விசாரிக்கவில்லை.

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவரை பார்க்க ரத்த சொந்தங்கள், உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களை ஏன் மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கவில்லை. அவருக்கு சிகிச்சை அளித்தபோது, மத்ததிய அமைச்சர்கள் உள்பட பலர் பார்க்க சென்றனர். அவர்களை ஏன் அனுமதிக்கவில்லை. இதுபற்றி மத்திய அரசு ஏன் தெரிந்தும், தெரியாததுபோல் நடந்து கொண்டுள்ளது.

மற்ற தலைவர்கள் இறப்பில் சந்தேகம் இருந்தால், அதனை விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது. உதாணத்துக்கு சுபாஷ் சந்திர போஸ் இறப்பில் சந்தேகம் எழுந்தபோது, அதற்கு ஓய்வு பெற்ற தனி நீதிபதிகள் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் சந்தேகம் உள்ளது. இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு அமைத்து, உரிய விசாரணை நடத்த வேண்டும். எனவே இந்த வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறேன் என கூறினார்.