ஜனநாயகம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்காதீர்கள் என முதல்வர் ஸ்டாலினை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்
மத்திய உள்துறை அமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்து சென்றுள்ளார். சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அமித் ஷா, தமிழ்நாட்டில் இருந்து 2 பிரதமர்களை கடந்த காலங்களில் தவறவிட்டுள்ளோம். அதற்கு காரணம் திமுகதான். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என்று பேசினார்.
முன்னதாக, சேலத்தில் முகாமிட்டிருந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் எந்த ஒரு சிறப்பு திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. திட்டங்கள் கொண்டு வந்திருந்தால் அதனை அமித் ஷாவால் பட்டியலிட முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார். காங்கிரஸ் - திமுக கூட்டணியின் போது, தமிழ்நாட்டுக்கு கிடைத்த சிறப்பு திட்டங்களையும் அவர் பட்டியலிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, வேலூரில் பாஜக 9 ஆண்டுகள் சாதணை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “காங்கிரசும், திமுகவும் 2ஜி, 3ஜி, 4ஜி என ஊழல் மட்டுமே செய்யும் கட்சி; 2 தலைமுறையாகவும், மூன்று தலைமுறையாகவும், நான்கு தலைமுறையாகவும் குடும்ப ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் 2ஜி, 3ஜி, 4ஜி ஊழல் செய்பவர்களை தூக்கி எறிந்துவிட்டு ஊழல் அற்ற தமிழனின் ஆட்சி அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்றார். மேலும், தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், மானியங்கள் குறித்தும் அவர் பட்டியலிட்டார்.
அமித் ஷாவின் வேலூர் பேச்சுக்கு பதிலடி கொடுத்த திமுக பொருளாளரும், எம்,பியுமான டிஆர் பாலு, தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க. ஆட்சியில் ஒரு சிறப்புத் திட்டமும் நிறைவேற்றவில்லை, ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட அளிக்கவில்லை என அமித் ஷா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள நிதி ஒதுக்கீடுகள், மானியங்கள், ஒன்றிய அரசு மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய அரசியல் சட்டக் கடமை. அது பா.ஜ.க.ஆட்சியில் இருப்பதால் வந்தது இல்லை. எந்த அரசு ஒன்றியத்தில் இருந்தாலும் அதைக் கொடுக்காமல் இருக்க முடியாது எனவும் டிஆர் பாலு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், “"சேலத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் நான் தெளிவாக பேசி இருக்கிறேன். அதாவது, இந்த 9 வருட பாஜக ஆட்சியில் எந்த ஒரு சிறப்பு திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. ஆனால் ஏற்கெனவே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த திமுக, அப்போது மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்தது என்பதை பட்டியல் போட்டு நான் காண்பித்து இருக்கிறேன். அதை அமித்ஷா படிக்கவில்லையா? படித்து அதை யாரும் எடுத்து சொல்லவில்லையா?” என கேள்வி எழுப்பினார்.
மோடி மீது அமித்ஷவிற்கு என்ன கோபம்? எல்.முருகன், தமிழிசை பிரதமராக வாய்ப்பு... மு.க.ஸ்டாலின்
தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்ற அமித்ஷா கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதன் உள்நோக்கம் புரியவில்லை. வெளிப்படையாக இந்தக் கருத்தை அவர் கூறி இருந்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும். பிரதமர் மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. 2024ம் ஆண்டில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் உள்ளார்கள். ஒரு வேளை இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன். “என்றார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஜனநாயகம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்காதீர்கள் என விமர்சித்துள்ளார்.
ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டு சில விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். அதன்படி, “‘வம்சம்’ என்ற வார்த்தையாலும், ‘கருணாநிதி’ என்ற உங்களின் குடும்பப் பெயராலும் நீங்கள் இந்த நிலையில் இருக்கிறீர்கள். ப்ளீஸ், ஜனநாயகம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்காதீர்கள். பாஜகவில் ஒரு பூத் தலைவர் கட்சியில் எந்த பதவியையும் வகிக்கலாம். நமது ஜனநாயகத்துக்குட்பட்டு எந்தப் பதவியையும் வகிக்க முடியும். எங்கள் கட்சிதான் அதற்கு வாழும் உதாரணம்.
ஆனால், திமுகவிலோ பெரிய பொறுப்புகளை வகிப்பவர்கள் உங்கள் கோபாலபுரம் வீட்டில் பிறக்க வேண்டும் என்பதே அடிப்படை அளவுகோல், அதனால்தான் உள்துறை அமைச்சர், உங்கள் குடும்பத்தை 3G (3 தலைமுறை வம்சம்) என்றும், 4ஜி (4 தலைமுறை வம்சம்) என உங்கள் கூட்டாளியான காங்கிரஸ் கட்சியையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தயவு செய்து 2004-2014 பற்றி பேசவே வேண்டாம்; இலங்கையில் 1.5 லட்சம் தமிழ் சகோதர, சகோதரிகள் கொல்லப்பட்டதற்கு உங்கள் கட்சிதான் காரணம், 'ஊழல்' என்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பணியாற்றிய உங்கள் கட்சியின் அமைச்சர்களுக்கு மிகவும் பொருத்தமான வார்த்தையாகும்.
தமிழ் மொழியும் கலாச்சாரமும் தமிழ்நாட்டின் எல்லைகளைத் தாண்டாதபடியும், உங்கள் கட்சி பார்த்துக் கொண்டது. உலகின் பழமையான மொழியான நமது தமிழுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய கேடு இது. ஆனால், பிரதமர் மோடி தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார். நமது மொழி உண்மையிலேயே இப்போதுதான் கவனத்தையும் செழுமையையும் பெறுகிறது. தமிழ் பற்றி யாரேனும் பேசினால், அதுபற்றி பேசும் கடைசி நபராக நீங்கள் இருக்க வேண்டும்.” என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
