அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து ஏராளமான ஆவணங்கள், பணம் உள்ளிட்டவை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர், நாமக்கல் சுப்பிரமணியம் வீட்டிலும் சோதனை நடந்தது. அப்போது, அங்கிருந்து சில ஆவணங்களை கைப்பற்றியதாக அதிகாரிகள் கூறினார்.

ஆனால், அதுபோன்று எதையும் அதிகாரிகள் கைப்பற்றவில்லை என சுப்பிரமணியம் கூறி வந்தார். இதையடுத்து, அதிகாரிகள், அவரை விசாரணைக்காக அழைத்தனர். இதனால், மன உளைச்சல் அடைந்த சுப்பிரமணியம் கடந்த கடந்த 8ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில் கான்ட்ராக்டர் சுப்ரமணியம் இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் வெளியானது. அதில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பெயர் இடம் பெற்றிருந்தது. தற்போது இந்த வழக்கை, தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது.

விசாரணை அதிகாரியாக சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சத்தியமூர்த்தி, நேற்று மதியம் நாமக்கல் எஸ்.பி அருளரசை சந்தித்தார்.

அப்போது, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று கொண்டதுடன், அவருடன் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், சிபிசிஐடி அதிகாரி சந்தியமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுள்ளோம். சுப்பிரமணியம் தனது கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் அனைவரிடமும், விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றார்.