Doctors warn of surgery in the first government hospitals tomorrow

அரியலூர்

அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்ற அரசு மருத்துவர்கள், “எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் திட்டமிட்ட அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும்” என்று எச்சரித்தனர்.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் கிராமப்புற அரசு மருத்துவர்கள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

“முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகிய படிப்புகளுக்கு அனைத்து அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2018-19-ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மருத்துவ பட்டப் படிப்பிற்கானத் தேர்வை தமிழக அரசே நடத்த வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்து வருகின்றது.

இந்த நிலையில், நேற்று அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அரியலூர் பேருந்து நிலையம் முன்பு பந்தல் அமைத்து அரசு மருத்துவர்கள் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு மருத்துவர் கொளஞ்சிநாதன் தலைமை வகித்தார். அருண் பிரசன்னா விளக்க உரையாற்றினார்.

அப்போது மருத்துவர்கள், “எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.

3-ஆம் தேதி (நாளை) முதல் அரசு மருத்துவமனைகளில் திட்டமிட்ட அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படும். அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல செயல்படும்.

8-ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். அதன்பிறகும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 10-ந் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவர்களும் விடுப்பில் செல்ல உள்ளோம்” என்று எச்சரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தின் முடிவில் ராஜ் பரத் நன்றித் தெரிவித்தார்.