திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் மற்றும் சிகிச்சை விவரம் குறித்து காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன் என புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார். கருணாநிதி விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஒருவாரமாக வீட்டில் இருந்த படியே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு உடல்நிலை மோசமானதையடுத்து மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் அவரக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருணாநிதியின் உடல்நலம் பற்றி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் காவேரி மருத்துவமனையை தொடர்பு கொண்டு, திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும், அவர் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று விசாரித்தேன் என்றும் பேட்டியளித்துள்ளார்.