Doctors protest against federal bill 175 government hospitals did not function ...
தூத்துக்குடி
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் தூத்துக்குடியில் 175 அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுகள் செயல்படவில்லை.
மத்திய அரசு இந்திய மருத்துவ ஆணையம் அமைப்பை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை உருவாக்கி, அதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
இந்த மசோதா நவீன சிகிச்சை முறைகளை ஆறு மாத பயிற்சி வகுப்புக்கு பிறகு அனைத்து வழிமுறை மருத்துவர்களும் செய்ய வழி வகுக்கிறது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ நிபுணர்கள் உறுப்பினராவதை தடுத்து, பிற துறையை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சித்துறை நிர்வாகிகள் நியமிக்கப்படுவதை ஊக்குவிக்கிறது.
எனவே, இந்த மசோதாவை எதிர்த்து இந்திய மருத்துவ கழகம் சார்பில், அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட இந்திய மருத்துவ கழகம் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் 175 அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு மட்டும் செயல்படாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மருத்துவர் குமரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து இருந்தனர். புதிய மசோதாவை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள் மோசஸ், இன்பராஜ், அருள்பிரகாஷ், மும்மூர்த்தி உள்பட பலர் பங்கேற்று மத்திய அரசின் மசோதாவிற்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
