தனியார் மருத்துவமனையில் சக ஆண் பணியாளருடன் பேசிக் கொண்டிருந்த செவிலியரை, டாக்டர் கண்டித்த நிலையில் மனமுடைந்த நர்ஸ், மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடியில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாக செவிலியராக வேலை பார்த்து வருபவர் தாயம்மாள் (24). இவரது தந்தை மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

தாயம்மாள் வழக்கம்போல், மருத்துவமனையில் நேற்று இரவு பணி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வேலை பார்க்கும் சக பணியாளருடன் தாயம்மாள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

அந்த சமயத்தில் ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர் முத்து, தாயம்மாளிடம், இந்த நேரத்தில் வேலையைப் பார்க்காமல் ஆம்பளைப் பயல்கூட உனக்கென்ன பேச்சு என்று கூறிவிட்டு, தொடர்ந்து தவறான வார்த்தைகளால் தாயம்மாளைத் திட்டியுள்ளார்.

டாக்டர் முத்துவின் தகாத வார்த்தையால் மனமுடைந்த செவிலியர் தாயம்மா இரவு முழுவதும் அழுது கொண்டிருந்திருக்கிறார். அதிகாலை 5 மணி அளவில், தனது துப்பட்டாவை எடுத்து, அந்த அறையில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு இறந்திருக்கிறார். 

தாயம்மா, தூக்கில் தொங்குவதைப் பார்த்த சக ஊழியர்கள் பதறினர்.  இதனைக் கேள்விப்பட்ட டாக்டர் முத்து, அதிர்ச்சியடைந்து தனது அறைக்குள் இருந்திருக்கிறார். இது குறித்து, மணல்மேல்குடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். இதனிடையே, தாயம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல், மீனவப் பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. தாயம்மாளின் உறவினர்களும், அப்பகுதி மீனவமக்களும், மணல்மேல்குடியில் உள்ள மருத்துவமனைக்கு முன்பாக திரண்டனர்.

தாயம்மாள் சாவில் மர்மம் இருப்பதாக அவர்கள் கூறினர். மேலும், தாயம்மாள் சாவுக்கு காரணமான டாக்டர் முத்துவை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தாயம்மாள் ஒழுக்கமானவ... பசங்கக்கூட பேசவே மாட்டாள். அந்த டாக்டர்தான் அவளைக் கொலை பண்ணி தூக்குல மாட்டிகிட்டதா பொய் சொல்கிறார். அவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமாதானப் பேச்சு நடத்தினர். மேலும், தாயம்மாளை ஆபாசமாக திட்டியதாக சொல்லப்பட்ட டாக்டர் முத்துவிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர். தாயம்மாள் உடலை மீட்ட போலீசார், மணல்மேல்குடி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.