do not put banner or cut out for living people ordered high court

உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களையோ கட் அவுட்களையோ வைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் தலைத்தோங்கியுள்ள இந்த தருணத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக பிறப்பித்துள்ள உத்தரவு, பேனர் கலாச்சாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோக்‌ஷன குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்களோ அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்களோ வைக்கப்படக்கூடாது. கட்டடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் வைக்கக்கூடாது. பேனர்களோ கட் அவுட்களோ மக்களுக்கோ போக்குவரத்துக்கோ இடையூறாக இருக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். 

சுத்தமான சுகாதாரமான சூழ்நிலைகள் நிலவ மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1959-ம் ஆண்டு விளம்பர சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனியாவது பேனர் கலாச்சாரத்திற்கு ஒரு தீர்வு கிடைக்குமா என பேனர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.