நாகப்பட்டினம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை வழங்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் நக்கீரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சிங்காரவேலு வரவேற்றார். இதில் மாநிலச் செயலாளர் சௌந்திரபாண்டியன் பங்கேற்றுப் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 13 ஆயிரத்து 245 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் வீடு கட்டும் பணிக்கு வட்டாரத்திற்கு ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவியாளர், கம்ப்யூட்டர் உதவியாளர், 5 ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கொண்ட தனி ஊழியர் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மற்றும் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை வழங்கக் கூடாது” என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) முருகேசன் உள்பட பலர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.