விருதுநகர்

இராணுவ தளவாட உற்பத்தியை தனியாரிடம் வழங்க முடிவு செய்திருக்கும் மத்திய அரசை எதிர்த்து விருதுநகரில் அனைத்து தொழிற்சங்கத்தினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் இராணுவத்  தளவாட பொருள் உற்பத்தியை தனியாரிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கத்தினர்  விருதுநகரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "நிலக்கரி சுரங்கம்,  இராணுவ தளவாட உற்பத்தியை தனியாரிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பது, 

பெரிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் பொதுத்துறை வங்கிகளை சூறையாட வசதியாக, வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு வழி வகை செய்து வருகிறது. எனவே, மத்திய பாஜக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது" போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப். சங்கத்தின் மாவட்டத் தலைவர் பால்பாண்டி, ஏஐடியுசி சங்கத் தலைவர் ஆதிமூலம், ஐ.என்.டி.யு.சி சங்க நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினார்.  இதில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.