கடலூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்றும் என்.எல்.சி. அனல்மின் நிலையத்தை  இன்று தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க., காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முழு அடைப்பு போராட்டத்தையும் நடத்தினர். மாணவர்களும் பல்வேரு இடங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்றும் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. அனல்மின்நிலையத்தை 10-ஆம் தேதி (இன்று) முற்றுகையிட்டு போராட்டம்  நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10 மணியளவில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் என்.எல்.சி. மருத்துவமனை அருகில் ஒன்று திரண்டு, என்.எல்.சி. அனல்மின்நிலையத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாக செல்ல இருக்கின்றனர்.

இந்த பேரணியில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் திரளாக பங்கேற்கிறார்கள். 

இந்த பேரணி செவ்வாய் சந்தை, புதுக்குப்பம் ரவுண்டானா, நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு உள்ள கியூ பாலத்தை சென்றடைகிறது. அங்கு அனல்மின் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

இந்தப் போராட்டத்தையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல காவல் ஐ.ஜி.ஸ்ரீதர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவல் உயரதிகாரிகள் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர்.

அப்போது, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் மாநில நிர்வாகிகளை அழைத்து போராட்டம் குறித்து பேசினர். 

இந்தப் போராட்டத்தையொட்டி ஐ.ஜி. ஸ்ரீதர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 8 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 30 காவல் ஆய்வாளர்கள், 500 காவலாளர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 200 பேர் என 750-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் நெய்வேலியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தின்போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாதவாறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும், காவலாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.