Do not drive over 8 hours a day
ஒரு நாளைக்கு 8 மணி நேரம்தான் வாடகைக்கார் ஓட்ட வேண்டும் என்றும் மீறினால் ஓட்டுநர் உரிமை ரத்து செய்யப்படும் என்றும், தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம் பிடித்திருக்கிறது. நாட்டிலேயே அதிக அளவு சாலை விபத்துகள் நடப்பது தமிழகத்தில்தான். தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில்தான் அதிகளவு விபத்துகள் நடந்துள்ளன

சாலை விபத்துகள் ஏற்படுவதில், சுற்றுலா பேருந்துகளும், சுற்றுலா வாகனங்களுமே அதிகளவில் விபத்துக்குள்ளாகிறது. இதனைக் குறைக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில சாலை பாதுகாப்பு ஆணையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு 17,218 பேரும், 2017 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் வரை 14,077 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
90 சதவீத சாலை விபத்துகளுக்கு காரணம் ஓட்டுநர்கள் நீண்ட நேரம் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் களைப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் சுற்றுலா பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களே அதிக விபத்துகுள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் குறைக்கும் வகையி 1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் 1961 ஆம் ஆண்டில் குறிப்பிட்டுள்ள சட்ட வரையறைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு நாளில் 8 மணி நேரத்துக்குமேல் வாடகைக்கு கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மிகாமலும், வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கும், ஒரு நாள் ஓய்வுடன் வாகனங்களை இயக்கவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
சுற்றுலா வாகனங்களை இயக்கும் ஓடுடநர்கள், பணி முடிந்த பின்னர் தொடர்ச்சியாக அடுத்த பணி செய்ய வலியுறுத்தக்கூடாது. ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை மற்றும் தனி நபர் விபத்து காப்பீடு அவசியம் வைத்திருத்தல் வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் சட்டவிதிகளை மீறும் வாகனத்தின் அனுமதி சீட்டு மற்றும் தகுதிசான்றிதழ்கள் புதுப்பிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில் சட்டவிதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
