Asianet News TamilAsianet News Tamil

துப்புரவு பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு...

do not build apartment building for cleaning staff petition to collector
do not build apartment building for cleaning staff petition to collector
Author
First Published Apr 24, 2018, 9:47 AM IST


கரூர்
 
துப்புரவு பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பை வேறு இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேராணக்கல்பட்டி கிராம மக்கள் கரூர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் அன்பழகன் தலைமை வகித்தார். அவர், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இந்தக் கூட்டத்தில் கரூர் தோரணக்கல்பட்டி கிராமம் டி.செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டுவந்து மனு ஒன்றை ஆட்சியரிடம் கொடுத்தனர். 

அந்த மனுவில், "எங்களது பகுதியில் 3000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்களது பகுதியில் சரியான குடிநீர் வசதி இல்லை. குடிநீர் எப்போதாவது வந்தாலும் அதிலும் கழிவு நீர் கலந்து வருவதால் தொற்று நோய் ஏற்படுகிறது. 

தற்போது எங்களது பகுதியில் அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் துப்புரவு பணியாளர்களுக்கு கட்ட இடம் தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும்.

அரசு மேல்நிலைப்பள்ளி அருகே புதிதாக அடுக்குமாடிகள் கட்டப்படுவதால் விளையாட்டு மைதானம் பாதிக்கப்படும். வருங்காலத்தில் பள்ளிக்கட்டிடம் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும். 

எனவே, துப்புரவு பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பை வேறு இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று, வேலாயுதம்பாளையம், கரைப்பாளையம், கட்டிப்பாளையம், கோம்புபாளையம், நடையனூர், முத்தனூர், கவண்டன்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், "புகளூர் காகித ஆலை நிறுவனத்தினர் காவிரி ஆற்றில் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதையும், காவிரி ஆற்றங்கரையோரம் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகளில் ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும். குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என்று  கேட்டுக் கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டன. மனுவை பெற்ற ஆட்சியர் அன்பழகன் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios